வைரஸ் பரவல் காரணமாக பாதிப்பிற்குள்ளாகியுள்ள கல்வித்துறை தொடர்பில் அரசாங்கத்தால் மேலும் வலுவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அத்தோடு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றை நடத்துவது தொடர்பிலும் ஆராய வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்வித்துறையும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை அனைவர் தொடர்பிலும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
இதற்காக கல்விமான்களின் கல்வித்துறைசார் அதிகாரிகளின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகள் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய சூழல் எப்போது நிறைவடையும் என்பது தொடர்பில் யாராலும் உறுதியாகக் கூற முடியாது.
இம்மாத இறுதியில் கல்வி நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்று நாம் எண்ணவில்லை. உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது இறுதித் தவணையை நிறைவு செய்திருக்க வேண்டும். இவ்வாறான விடயங்களை கருத்திக் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும்.
அத்தோடு விடுமுறை தினங்களில் மாணவர்கள் தவறான பாதையில் சென்றுவிடாது கல்வி நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்படுவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.